Thursday, December 1, 2011

எச்சில் இலை


எச்சில் இலையில் உருளும் பக்த கோடிகள்

"கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷன கன்னடா என்ற மாவட்டத்தில் இருக்கும் குகி சுப்ரமணியா கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சல் இலை மீது உருண்டு நேர்த்திக் கடன் செய்யும் நடவடிக்கை மனித நேயத்துக்கு எதிரானது என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்த பிற்படுத்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆர்வலர் தாக்கப்பட்டுள்ளார்."  நன்றி BBC



BBC யில் வெளிவந்த இந்த படத்தையும் செய்தியும் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மக்களிடையே இந்த ஜாதி நம்பிக்கை எத்தனை ஆழமாக விதைக்கப்படிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். தடை விதிக்கப்பட்டிருந்த இந்த "நேர்த்திகடனை" பாரதிய ஜனதா அரசு பின்வாங்கி தடையை நீக்கி இருப்பது இந்தியாவை "வல்லரசாக" ஆக்கும் திட்டத்தின் முதல்படியோ???

இந்த வெட்கம் கெட்ட நேர்த்திகடனை கடனை யார் ஆரம்பித்தார்கள், யார் நிறைவேற்றுகிறார்கள், யார் சாப்பிட்ட எச்சில் இலை, எந்த எந்த ஜாதியினர் உருளுகிரார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இத்தனை மனித நேயமற்ற நிகழ்வின் மீதான தடையை நீக்கி நிர்வாகம் இதனால் சாதிக்க போவது என்ன என்பதுதான் கேள்வி? 

படிப்பறிவில்லாத, படித்தும் பகுத்தறிவில்லாத மக்கள் இருக்கும் நம் நாட்டில் சில விஷயங்களை கடுமையான சட்டங்கள் மூலம்தான் நிறைவேற்ற வேண்டும். 

காலம் காலமாக நடந்து வந்த உடன் கட்டை ஏறுதல், பாலர் விவாஹம் மற்றும் தேவதாசி முறைகளை ஆங்கிலேயர்கள் சட்டம் இயற்றி தடுத்த போது நம் "கலாசார காவலர்கள்" அதையும் எதிர்க்கத்தான் செய்தார்கள். ஆனால் மக்கள் நலன் விரும்பும் எந்த அரசும் இதுபோல காட்டு மிராண்டி தனத்தை ஆதரிக்க கூடாது. 

இது பற்றி கருது கூறிய சமூகவியல் பேராசிரியர் GSR கிருஷ்ணன் அவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை. காலப்போக்கில் இந்த நிலைப்பாடு மாறும் என்று அவர் கூறும் போது "எத்தனை காலம்" என்ற கேள்வி எழுகிறது? அதுவரை இதை ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்?

இந்த "நேர்த்திகடனை" ஆதரிக்கும் பிரஹஸ்பதிகள் "ஹிந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை மட்டும் ஏன் தட்டி கேட்கிறீர்கள்? மற்ற மதங்களை ஏன் கேட்பதில்லை?" என்று. இந்தியாவில் பெரும்பான்மையோர் பின்பற்றும் மதமாக இருப்பதாலும், இந்த குறிப்பிட்ட மதத்தினரின் தற்குறி செயல்பாடுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக சர்வதேச சமுதாயத்தில் பிரதிபலிப்பதாலும் இதை குறிப்பிட்ட மதத்தின் அவமானமாக பார்க்காமல் ஒட்டு மொத்த இந்தியாவின் அவமானமாக பார்க்க வேண்டி இருக்கிறது.

நான் சேர்ந்த ஹிந்து மதத்தில் ஆயிரம் குற்றம் குறைகளை வைத்து கொண்டு எந்த முகத்தோடு மற்ற மதங்களை நான் விமர்சிக்க முடியும். முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு அடுத்தவர் வீட்டை பற்றி விமர்சிக்கலாம். இந்த "ஹிந்து கலாச்சார காவலர்களுக்கு" இதை யார் புரிய வைப்பார்கள்????????

இந்த நிலை தொடர்ந்தால் 2020 ல் இந்தியா எப்படி வல்லரசாகும்? அதனால் என்ன காத்திருப்போம். ஒருவேளை "காலப்போக்கில்" எல்லாம் மாறி 3020  நாமும் வல்லரசாவோம்.


Friday, November 25, 2011

வேதாளம் சேருமே

ஒளவையாரின் 'நல்வழி"யை படித்தேன். அந்த காலத்தில் குற்றதிற்கு தண்டனைகள் மிக கடுமையாக இருந்தன போலும். அரசன் விதிக்கும் கை வெட்டும், கால வெட்டும், கழு ஏற்றும் தண்டனைகள் போக, புத்தி சொல்லும் புலவர்கள் கூறும் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கின்றன. இந்த பாடலை பாருங்கள்.


"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."

எளிய பாடல்தான். விளக்கம் புரிந்திருக்கும்.புரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.
"வீட்டில் பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வேள்ளேருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்" இத்தகைய கொடும் தண்டனைகள் யார் வீட்டில் நிகழும்????
நீதி மன்றத்தில் பொய் சொல்பவர்கள் வீட்டில்தான் இப்படி சகல தண்டனைகள் நிகழும் என்று அவ்வை மூதாட்டி எச்சரிக்கிறார்.  நீதி மன்றத்தில் பொய் சொல்வதும், பொய் சாட்சி சொல்வதும் எத்தனை பெரிய பாவம் என்பதையும் நீதி மன்றத்தின் மாட்சியையும் இந்த பாடல் உணர்த்துகிறது. 

அது போகட்டும். சமீப காலமாக எனக்கு ஒரு புதிய மன நோய் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஒன்றை பற்றி பேசும்போது, அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத மற்ற சம்பவங்கள் நினைவிற்கு வந்துவிடுகிறது. இப்படிதான் அவ்வையார் பாடலை பற்றி பேசும் போது அவசியம் இல்லாத "கனிமொழி, ராசா, சிதம்பரம்,சரத்குமார், சந்தோலியா, நீரா ரடியா, சுரேந்திர பிபாரா,சஞ்சய் சந்திரா, ராஜீவ் அகர்வால், ஷஹிட் பால்வா, ஆசிப் பால்வா, கரீம் மொராணி இந்த பெயர்கள் எல்லாம் ஏன் தோன்றுகிறது என்று புரிந்து தொலையவில்லை 

ஹர்விந்தர் சிங்- இந்திய இளைஞனின் மன சாட்சி 

சரத் பவாரின் கன்னத்தில் அறை விட்டு ஒரே நாளில் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஹர்விந்தர் சிங்,ஒரு தனி மனிதனாக இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய இளைஞர்களின் மனசாட்சியாகதான் பார்க்க வேண்டி இருக்கிறது. அதே போல அடி வாங்கிய சரத் பவாரும், ஒட்டு மொத்த ஊழல அரசியல்வாதிகளின் பிரதிநிதியாகத்தான் கருத வேண்டும். இது தனி மனித தாக்குதல் இல்லை. மக்களை வெறும் ஒட்டு போடும் எந்திரமாக நினைத்து இஷ்டம் போல செயல்படும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.


அன்னா ஹசாரே போன்றோரின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை"ஒரு அடி" முன்னே எடுத்து சென்றிருக்கிறார் ஹர்விந்தர். பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளுமே பொத்தாம் பொதுவாக இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்திருக்கிறது.அது சரி. எல்லா அரசியல்வாதிகளுக்கும்  உள்ளூர அந்த பயம் இருக்கத்தானே செய்யும். வெறுமனே "facebook" "twitter"ல் ஊழலுக்கு எதிராக வாக்களித்துவிட்டு அடுத்த நாள் வழக்கமான வேலைக்கு திரும்பும் நம்மவர்கள் மத்தியில் அதற்கு மேலும் செய்ய முடியும் என்று சாதித்து காட்டி இருக்கிறார் இந்த சிங். 


ஒரு கிழட்டு மனிதரை அறைந்தது பெரிய சாதனை இல்லைதான். ஆனால் ஒரு உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் மத்திய அமைச்சரை பொது இடத்தில் அறைந்தால் விளைவு என்ன ஆகும் என்று தெரிந்து இருந்தும் அதை வீரத்தோடு செய்து காட்டி இருக்கும் சிங் பாராட்ட பட வேண்டியவர். நம்மில் யாரும் "பகத் சிங்கை" பார்த்திருக்க வாய்ப்பில்லை. "youtube" ல் ஹர்விந்தரின் வீடியோ பார்த்த பின் அந்த குறை தீர்ந்து விட்டது. 


லாலா லஜபதி ராய் 1928ல் பிரிட்டிஷ் அடக்கு முறையில் அடிவாங்கி இறந்தபோது "பகத் சிங்" எப்படி கொதித்து இருப்பான் என்பதை இந்த ஹர்விந்தர் முகத்தில் காண முடிகிறது. 


"மக்கள் பிரதிநிதி " மீது ஒரு கிறுக்கு இளைஞனின் தாக்குதல் என்று இதை கண்டிக்க முடியவில்லை. நம்மால் முடியாததை இவன் செய்து காட்டி விட்டானே என்று அவரை பாராட்டத்தான் தோன்றுகிறது. 


இந்த சம்பவத்தால் ஒரே நாளில் ஊழல் ஒழிந்துவிட போவதில்லை. மந்திரி பிரதானிகளுக்கு பாதுகாப்பு கூடும் அவ்வளவுதான். பரவாயில்லை. ஆனால் எந்த நேரம் எந்த பக்கத்தில் இருந்து செருப்பு வந்து விழும் என்று ஒரு அச்சம் எல்லா அரசியல் வாதிக்கும் ஏற்படும் அல்லவா அதுவே ஒரு வெற்றிதான். 


வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகதுதான். ஆனால் தீர்வை துரிதமாக்கும். இல்லாவிட்டாலும் என்ன! கனல் பறக்கும் வசனம் பேசி, கவர்ச்சி நடிகைகளோடு குத்தாட்டம் போட்டு "காசு" சினிமா காரனுக்கு"fan"ஆக இருப்பதை விட ஹர்விந்தர் சிங் FAN என்று சொல்லு கொள்வது பெருமைதான். 

Friday, November 11, 2011

வாணி ஜெயராம் & மால்குடி சுபா


எனக்கு பிடித்த பாடகிகளில் வாணி ஜெயராமும் மால்குடி சுபாவும் முக்கியமானவர்கள். அவர்களின் குரல் வளம் அருமை பெருமைகளை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். இங்க நான் சொல்ல விழைவது இவர்கள் வாயிலாக ஒரு ஆன்மீக சிந்தனை.


ஒருமுறை வாணி ஜெயராமிடம் அவர் ஏன் இப்போதெல்லாம் திரைஇசை பாடல்கள் பாடுவதில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்னார் "இப்போதைய சினிமா பாடல்கள் தரமற்ற வகையில் இருப்பதால் சினிமாவில் பாடுவதில்லை. ஆனால் பக்தி பாடல்கள் மட்டும் தொடர்ந்து பாடி வருகிறேன்"  அவர் சொல்வது உண்மைதான். இப்போதைய பாடல்கள் கவர்ச்சி என்னும் எல்லையை மீறி ஆபாசத்தில் நீந்தி கொண்டிருப்பது உண்மைதான்.

             "எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும் ,
               நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்"


 என்று காதலில் கண்ணியம் பேசிய பாடல்கள் எல்லாம் மலையேறி போய்விட்டது. ஒருவகையில் வாணி ஜெயராம் இப்படி முடிவெடுத்தது சரிதான்.

               ஒருமுறை மால்குடி சுபாவிடம் அவர் பாப் மற்றும் "கிளப்" பாடல்கள் பாடுவதை பற்றி கேட்டபோது (இப்போது அவர் நிறைய பக்தி பாடல்களும் பாடி இருக்கிறார்) அவர் சொன்ன விளக்கம் அவர் மீதான என் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. அவர் சொன்னார் " நான் பாட வேண்டும் என்பது நான் எடுத்த முடிவல்ல. இந்த குரலும் பாடலும் இறைவன் தந்தது. நான் பாடும்போது இறைவனுக்கு கொஞ்சம் அருகில் செல்வது போல் உணர்கிறேன். எனக்கு பாடும் அந்த ஒலி மட்டுமே தெரிகிறது. மற்றபடி அது என்ன மொழி, என்ன அர்த்தம என்பது எனக்கு பொருட்டல்ல. ஏனெனில் இசை என்னை இறைவனுக்கு கொஞ்சம் அருகில் எடுத்து செல்கிறது"

             உண்மைதான். அவர் பாடுவது எதுவாக இருந்தாலும் எல்லாம் ஓசையின் வெவ்வேறு பரிமாணங்கள் தானே? அதற்கு நல்ல / கேட்ட அர்த்தம கற்பிப்பது நாம்தான். பாடவைப்பவர் இருக்க பாடுபவரை எப்படி குறை சொல்ல முடியும். அவர் பாடும் போது ஆன்மா இறைவனுக்கு சற்று அருகில் செல்வதாக உணர்கிறார். அவர் பாடுவதில்லை. பாட வைக்க படுகிறார். அவர் பாடாத போது அந்த பாடலின் அர்த்தத்திற்கு அவர் பொறுப்பாக முடியாது.

                வாணி ஜெயராம் இன்னும் "தான்" பாடுவதாக உணர்கிறார். அதனால் தவறு என்று அவர் நினைக்கும் பாடல்களை தவிர்க்கிறார். ஆனால் சுபா "தான்" பாடுவதாக சொல்லவில்லை. இறைவன் தன்னை பாடவிப்பதாக சொல்கிறார்.

                    இதைதான் "தான்" என்ற அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று மறை நூல்கள் சொல்லுகின்றன. இயங்குபரும் இன்றி, இயக்குபவரும் இன்றி வெறும் 'இயக்கம்" மட்டுமே மிஞ்சி நிற்கும் அந்த நிலை, இதுதானே வேதங்களும் சாஸ்திரங்களும் காண துடிக்கும் இறுதி நிலை.

                      செய்பவன் தன்னை மறந்து, செயவிப்பவனை தேடி அவனும் மறைந்து வெறும் "செயல்" மட்டும் நிலைத்து இருப்பதுதான் பிரபஞ்ச பேரியக்கத்தின் தத்துவம். சுபாவின் ஆன்மிக கருத்தாழம் பாராட்டத்தக்கது.

Wednesday, November 9, 2011

ஏழாம் அறிவு -போதி தர்மன்


                   'போதி தர்மன்" என்ற தமிழனின் பெருமையை உணர்த்துவதற்காக வெளிவந்திருக்கும் "ஏழாம் அறிவு" படம், வெளியான பிறகு எல்லா தமிழனையும் பெருமையோடு தலை நிமிர செய்யும் என்றார் இயக்குனர் முருகதாஸ். படத்தின் முதல் இருபது நிமிடம் வரும் போதி தர்மன் கதையை எடுத்து விட்டால் மீதி இருப்பது வழக்கமான அக்மார்க் மசாலா தமிழ் படம்.

                      லாஜிக்குக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப தூரம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சீனாவின் உளவு அமைப்பு இந்தியாவை "ஒழித்துக்கட்ட" ஒரு "மேஜிக் " கூர்க்கா (ஆளை பார்த்தல் அப்படிதான் இருக்கிறார்) அனுப்பி வைக்கிறது. அவரும் தெரு நாய்க்கு ஊசி போட்டு பயங்கர வைரஸ் ஒன்றை பரப்பி விடுகிறார். அத்துடன் கொசுறாக "நோக்கு வர்ம கலையால்" நகரத்தையே பத்து , பதினைந்து நாட்களுக்கு பந்தாடுகிறார். சீனா உளவு அமைப்பு படத்தை "sub title" உடன் பார்த்தால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வார்கள்.

                        அது ஒரு பக்கம் இருக்க அந்த "பயங்கர" கூர்காவை, மன்னிக்கவும் , வில்லனை ஒழித்துக்கட்ட சர்கஸ் வீரர் சூர்யாவின் ஜீன்களை தூசி தட்டி எழுப்பும் அழகிய பயோ டெக்னாலஜி மாணவி சுருதி ஹாசன். தன் முக்கிய கண்டுபிடிப்பு உதவியுடன் சூர்யாவை ஒரு பெரிய பாட்டில் தண்ணீரில் ஒரு வாரம் முக்கி வைக்க அவர் உடம்பில் உள்ள போதி தர்மன் ஜீன்கள் புத்துயிர் பெற்று வில்லனை "போதும் போதும்" என்ற அளவுக்கு புரட்டி எடுத்து விடுகிறது. கடைசியாக தமிழனின் பெருமையை மூச்சு விடாமல் மூணு நிமிடம் பேசி அழியாத தமிழர்க்கு படத்தை அர்ப்பணித்து முடித்திருக்கிறார்கள். அப்பாடா,.....

                        இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள சில வசனங்களை நீக்காவிட்டால் படத்தை இலங்கையில் திரையிட முடியாது என கண்டிப்பு காட்டவே அந்த வசனங்களை வெட்டி விட்டு வெளியிட்டிருக்கிறார்கள். வேறு வழி??

                         இது போதாதென்று வரலாறுக்கு புறம்பான வகையில் பொதி தர்மன் பாத்திரத்தை சித்தரிப்பதாக கூறி புத்த மத அமைப்பினர் புது சர்ச்சையை கிளப்பி உள்ளனர். பொதி தர்மன் சீனாவுக்கு சென்றடைந்தபோது அவர் ஒன்றும் இளைஜர் இல்லை 150 வயது கிழம் என்கிறார் போதி தர்மன்  பற்றி முப்பது வருடம் ஆராய்ச்சி செய்த ஒருவர். போதி  தர்மன் கிபி 440ல் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்று சில வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். சில பழங்கால சீன குறிப்புகள் மேற்படி ஆசாமி பாரசீகத்தில் இருந்து வந்ததாக கூறுகிறது. சில குறிப்புகள் அவர் அப்போதைய சீன பேரரசர் "வூ" என்பவருடன் "தர்க்கம் " செய்து பின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறுகிறது. போதி தர்மன் பற்றிய வரலாற்று குறிப்புகள் எல்லாம் போதிய கால சான்றுகள் இல்லாமல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆசிரியர்களும் புத்த பிட்சுகளும் எழுதிய முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் வலைத்தளம் எங்கும் கொட்டி கிடக்கிறது.

                         அதனால் என்ன!!!, வசதியான கமர்ஷியல் விஷயம் போதாதா தமிழ் படம் எடுக்க!!! இருந்தாலும் வரலாற்று சம்பவங்களை படமாக்கும் போது இயக்குனர் கொஞ்சம் "ஹோம் வொர்க்" செய்திருக்கலாம்.

                          'Titanic"  படத்தில் பயன்படுத்தப்பட்ட தரை விரிப்புகூட உண்மையில் அந்த கப்பலுக்கு தரை விரிப்பு செய்து கொடுத்த அதே  கம்பனியில் வாங்கினார்களாம்.

                           "Apocolyto" படத்தில் எதார்ததிர்காக அமெரிக்காவின் இடஹோ மாகாண பல்கலை கழகத்தில் மாயர் நாகரீகத்தை ஆராய்ந்த பேராசிரியர் "Richard D hansen"  என்பவரை ஆலோசகராக  பணியமர்த்தி இருந்தார் மெல் கிப்சன். கற்பனை கதையானாலும் நிஜத்தொடு ஒட்டி போக அவர் பெரிதும்  உதவியதாக கிப்சனே சொல்கிறார்.

                          சினிமா என்பது ஒரு மிகபெரிய ஊடகம், அதில் சொல்லும் எந்த கருதும் உண்மையாகவும் கூடுமானவரை எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்று வெளி நாட்டு சினிமாகாரர்கள் ரொம்பதான் மெனகேடுகிறார்கள்.   நம்ம தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் அவ்வளவு "Quality conscious" அவசியம் இல்லை. சுருதி ஹாசனின் கவர்ச்சியும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் எல்லா குறைகளையும் ஈடு கட்டி விடும். (ச்சீ, ஒரு பாட்டு கூட நினைவில் வரவில்லையே ) பொத்தாம் பொதுவாக எல்லா பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது,..

                 -இப்படிக்கு இந்த படக்குழுவிடம் இருந்து அடுத்த படத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் அப்பாவி தமிழ் ரசிகன் 

Monday, November 7, 2011

குறளும் விளக்கமும்


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது -   குறள்


         இந்த குறளை நான் ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் சமீபத்திய நிலவுகள் இதற்கான நல்ல விளக்கமாக இருப்பதும், வள்ளுவனின் இந்த குறள் 2000 வருடத்திற்கு பிறகும்கூட கொஞ்சம் பிறழாமல் நடப்பாகுவது வியப்பே.

          இந்த குறளுக்கான விளக்கம் இதுதான், இன்னார்க்கு இன்னது வாய்க்க வேண்டும் என்று இறைவன் வகுத்து கொடுத்திருக்கும் வழியில் அல்லாமல் அதை காட்டிலும் அதிகம் ஈட்டினாலும் அதனை அனுபவிக்க முடியாது.

          இதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் நம் முன்னால் முதல்வரை சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரை ஐந்து முறை அரியணை ஏற்றியது வரை இறைவன் வகுத்ததாக கொள்ளலாம். ஆசியாவிலேயே பணக்கார குடும்பமாக அவர் குடும்பம் மாறியது, இறைவன் வகுத்தல்ல, அவர்தாம் தொகுத்தது. ஆயினும் இந்த வயதான காலத்தில் தான் பெற்ற செல்வ மகள் ஐந்து மாதமாக சிறையில் வாடுவதும், ஐந்தாம் முறையாக ஜாமீன் நிராகரிக்க பட்டதும், வந்து போன ரம்ஜான், தீபாவளி, கார்த்திகை என எல்லா விழா நாட்களிலும் பெண்ணை சிறையில் வைத்துவிட்டு கொண்டாட முடியாமல் அன்னார் திண்டாடுவதுதான் "துய்த்தல் அரிது" என்றார் வள்ளுவர். 
                சமீப காலத்தில் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் விஷயம் "கூடங்குளம்". தொடர் மின் வெட்டு மற்றும் பெருகி வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு அணு மின் சக்தி அவசியம் என்று தோன்றுகிறது. ஆனால் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் "புருஷிமா" போல சுனாமியோ , புயலோ அல்லது நிலா நடுக்கமா வந்தால் தாங்குமா என்ற கூடங்குளம் மக்களின் அச்சம் நியாயமானதே.

                 ஜெர்மனி போன்ற வளர்ந்தே நாடே, ஜப்பான் புருஷிமா நிகழ்வுக்கு பின் 2020 க்குள் தன் எல்லா அணு மின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்து இருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது. (அதே சமயத்தில் இந்தியா அணு மின் உற்பத்தியை 2020க்குள் நான்கு மடங்கு உயர்தியாக வேண்டும் என்று பாரத பிரதமர், அதுவும் ஜெர்மனி அதிபர் முன் பேசி இருப்பது வேதனை)

                எப்படியானாலும் அணு மின் நிலையங்கள் எப்போதும் நம் தலைக்கு மேல் தொங்கும் கத்திதான். அரசு இந்த அணு மின் நிலையங்களை கை விட்டு வேறு சூரிய சக்தியோ, காற்றாலை மின்னுற்பதியோ ஊக்குவிக்க வேண்டும். அது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதுவும் இப்போதிருக்கும் மத்திய அரசு இருக்கும் பிரச்சினைகளை சாமளிக்கவே திணறி கொண்டிருக்கும் போது இது போன்று தொலை நோக்கு திட்டங்களை எதிர் பார்ப்பது முட்டாள் தனம்.

              அப்படி என்றால் என்ன செய்வது? இத்தனை கோடி செலவில் உருவான திட்டத்தை கை விடுவது சாத்தியமில்லை. இதை அப்படியே ஏற்று கொள்வதை தவிர வேறு வழி இல்லை. எதிர் காலத்தில் மேலும் அணு மின் சக்தியை நாடாமல் வழக்கத்தில் அல்லாத எரிசக்தி மூலங்களை பயன் பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். அப்துல் கலாமே சொல்லிவிட்டாரே இந்த அணு மின் நிலையம் பாதுகாப்பானதென்று. பிறகென்ன!!!!!!

              ஆனால் கலாம் ஒன்றும் கடவுள் இல்லை. இயற்கையின் சீற்றத்துக்கு முன்  மனித சக்தி எப்போதும் தோற்றுத்தான் போயிருக்கிறது.
               

பிரிவு

                     சென்னையில் இருந்து ஷார்ஜா வரும் விமானத்துக்காக காத்திருந்தேன். நேரம் நள்ளிரவு ஒரு மணி. ஒரு பெண், கையில் 2 வயது பெண் குழந்தை, கூட ஒரு வயதான பெண் (அந்த பெண்ணின் தாயார்) இன்னொரு இளம்பெண் (தங்கையாக இருக்க கூடும்) வழி அனுப்புவோர் கூட்டத்தில் காத்திருந்தனர். புர்கா அணிந்த அந்த பெண் கையில் இருந்த குழந்தையை தாயாரிடம் கொடுத்து விட்டு போர்டிங் பாஸ் வாங்க சென்றாள். தாயை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை வீரிட்டு அழுதது.பாட்டி எத்தனை சமாதானம் செய்தும் குழந்தை அடங்க வில்லை. பாஸ் கிடைத்ததும் வேகமாக சாமான்களை ஒப்படைத்துவிட்டு immigration check செய்து விட்டு, திரும்பி பார்க்காமல்  விமான நிலையம் உள்ளே சென்று மறைந்தே விட்டாள். குழந்தை இன்னும் கதறி கொண்டிருந்தது. பாட்டி புர்கா நுனியில் குழந்தையின் மூக்கை சிந்தி என்னமோ சொல்லி தேற்ற முயன்று கொண்டிருந்தாள்.

                     விமானத்தில் எனக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்த்திருந்தாள் அந்த பெண். முகத்தில் எந்த சலனமும் இல்லை. உணர்ச்சிகள் எதையும் வெளிப்படுத்தாத கண்கள். விமானம் மேலெழுந்து, சீட் பெல்ட் குறி அணைந்ததும் கழிப்பறை நோக்கி சென்றாள் அந்த பெண். சுமார் இருபது நிமிடத்திற்கு பிறகு திரும்பி வந்து அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் .

                      இப்போதும் அவள் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. ஆனால் அவள் இமைகள் சற்று வீங்கி கண்கள் சிவந்து இருந்தன.