Thursday, December 1, 2011

எச்சில் இலை


எச்சில் இலையில் உருளும் பக்த கோடிகள்

"கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷன கன்னடா என்ற மாவட்டத்தில் இருக்கும் குகி சுப்ரமணியா கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சல் இலை மீது உருண்டு நேர்த்திக் கடன் செய்யும் நடவடிக்கை மனித நேயத்துக்கு எதிரானது என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்த பிற்படுத்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆர்வலர் தாக்கப்பட்டுள்ளார்."  நன்றி BBC



BBC யில் வெளிவந்த இந்த படத்தையும் செய்தியும் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மக்களிடையே இந்த ஜாதி நம்பிக்கை எத்தனை ஆழமாக விதைக்கப்படிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். தடை விதிக்கப்பட்டிருந்த இந்த "நேர்த்திகடனை" பாரதிய ஜனதா அரசு பின்வாங்கி தடையை நீக்கி இருப்பது இந்தியாவை "வல்லரசாக" ஆக்கும் திட்டத்தின் முதல்படியோ???

இந்த வெட்கம் கெட்ட நேர்த்திகடனை கடனை யார் ஆரம்பித்தார்கள், யார் நிறைவேற்றுகிறார்கள், யார் சாப்பிட்ட எச்சில் இலை, எந்த எந்த ஜாதியினர் உருளுகிரார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இத்தனை மனித நேயமற்ற நிகழ்வின் மீதான தடையை நீக்கி நிர்வாகம் இதனால் சாதிக்க போவது என்ன என்பதுதான் கேள்வி? 

படிப்பறிவில்லாத, படித்தும் பகுத்தறிவில்லாத மக்கள் இருக்கும் நம் நாட்டில் சில விஷயங்களை கடுமையான சட்டங்கள் மூலம்தான் நிறைவேற்ற வேண்டும். 

காலம் காலமாக நடந்து வந்த உடன் கட்டை ஏறுதல், பாலர் விவாஹம் மற்றும் தேவதாசி முறைகளை ஆங்கிலேயர்கள் சட்டம் இயற்றி தடுத்த போது நம் "கலாசார காவலர்கள்" அதையும் எதிர்க்கத்தான் செய்தார்கள். ஆனால் மக்கள் நலன் விரும்பும் எந்த அரசும் இதுபோல காட்டு மிராண்டி தனத்தை ஆதரிக்க கூடாது. 

இது பற்றி கருது கூறிய சமூகவியல் பேராசிரியர் GSR கிருஷ்ணன் அவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை. காலப்போக்கில் இந்த நிலைப்பாடு மாறும் என்று அவர் கூறும் போது "எத்தனை காலம்" என்ற கேள்வி எழுகிறது? அதுவரை இதை ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்?

இந்த "நேர்த்திகடனை" ஆதரிக்கும் பிரஹஸ்பதிகள் "ஹிந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை மட்டும் ஏன் தட்டி கேட்கிறீர்கள்? மற்ற மதங்களை ஏன் கேட்பதில்லை?" என்று. இந்தியாவில் பெரும்பான்மையோர் பின்பற்றும் மதமாக இருப்பதாலும், இந்த குறிப்பிட்ட மதத்தினரின் தற்குறி செயல்பாடுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக சர்வதேச சமுதாயத்தில் பிரதிபலிப்பதாலும் இதை குறிப்பிட்ட மதத்தின் அவமானமாக பார்க்காமல் ஒட்டு மொத்த இந்தியாவின் அவமானமாக பார்க்க வேண்டி இருக்கிறது.

நான் சேர்ந்த ஹிந்து மதத்தில் ஆயிரம் குற்றம் குறைகளை வைத்து கொண்டு எந்த முகத்தோடு மற்ற மதங்களை நான் விமர்சிக்க முடியும். முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு அடுத்தவர் வீட்டை பற்றி விமர்சிக்கலாம். இந்த "ஹிந்து கலாச்சார காவலர்களுக்கு" இதை யார் புரிய வைப்பார்கள்????????

இந்த நிலை தொடர்ந்தால் 2020 ல் இந்தியா எப்படி வல்லரசாகும்? அதனால் என்ன காத்திருப்போம். ஒருவேளை "காலப்போக்கில்" எல்லாம் மாறி 3020  நாமும் வல்லரசாவோம்.