Friday, January 6, 2012

மழலைச்சொல் கேளாதவர்



                                              குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள்
                                               மழலைச்சொல் கேளா தவர்.

                                                                                       திருக்குறள்


                 வங்காளிகளை (பங்களாதேஷ்காரர்கள்) பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாதுதான். ஐக்கிய அரபு எமிரேயதுக்கு வந்த பிறகு சில வங்காளிகள் பரிச்சயமானர்கள். பெரும்பாலும் தொழிற்சாலையில் பணிப்புரிபவர்கள். சில லட்சம் பங்களாதேஷ் டக்கா செலவழித்து இங்கு வரும் அவர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானத்தில் வேலை செய்யும் தொழிலாளிகள்தான். அவர்களுக்கு ஊருக்கு பணம் அனுப்பவது (பெரும்பாலும் 300 அல்லது அதிகபட்சம் 500 திர்ஹம் இருக்கும் ), தேவையான போது புகைப்படம் எடுத்து தருவது (விசாவை புதுப்பிக்க /புதிய விசா எடுக்க) தொலைபேசி கார்டு (பெரும்பாலனவர்கள் தொலைபேசியில்தான் சொந்தங்களை பேணி வருகிறார்கள்) வாங்கி தருவது என்று சில உபகாரங்களை செய்து வருவதால் எனக்கு பல வங்காளி நண்பர்கள் உள்ளனர். நகருக்கு வெளியில் ஒதுங்கி இருக்கும் தொழிற்சாலை பகுதியில் இருந்து இந்த சிற்சில காரியங்களுக்காக நகருக்கு வருவது அவர்களுக்கு விருப்பம் இல்லை. விருப்பம் என்ன- வசதி இல்லை. 300 திர்ஹம் அனுப்ப 10 திர்ஹம் பேருந்து கட்டணம் கட்டுபடி ஆகாது. அந்த 10 திர்ஹம் பங்களாதேஷுக்கு அனுப்பினால் அவர்கள் குடும்பத்திற்கு 220 பங்களாதேஷ் டக்கா கூடுதலாக கிடைக்குமே! எனவே தினமும் நகருக்குள் வந்து செல்லும் நான் இது போன்ற கைங்கர்யங்களை ஏற்று எடித்திருந்தேன்.

              அன்றைக்கு ஒரு வங்காளி நண்பனுக்கு நிறைய புகைப்படம் பிரதி எடுக்க வேண்டி இருந்தது . பரட்டை தலையும், அழுக்கு உடையும், இடுங்கிய கண்களும், ஒடுங்கிய தேகமுமாய் இருப்பான் அவன். அவனும் என்னோடு வந்திருந்தான்.எனக்கு தெரிந்த புகைப்பட கடைக்கு அழைத்து சென்று அவன் கொண்டு வந்திருந்த படங்களை பிரதி எடுக்க சொன்னேன்.அந்த கடைக்காரர் மலையாளி என்பதால் எனக்கு தெரிந்த அரை குறை மலையாளத்தில்பேசி 10 திர்ஹமிற்கு 6 பிரதிகள் என்ற புகைப்பட தர்மத்தை 10 திர்ஹமிற்கு 8 பிரதிகள் என்று சில மாதங்களுக்கு முன்பு போராடி மாற்றி வைத்திருந்தேன். இந்த சலுகை அந்த கடையில் எனக்கு மட்டுமே உரித்தானது. ஆனால் இப்போது புகைப்படத்தின் பின்னணியை மாற்ற 5 திர்ஹம் கூடுதலாக கேட்டார் கடைக்காரர். (அரசாங்க பணிகளுக்கு தர வேண்டிய படங்களின் பின்னணி வெண்மையாக இருக்க வேண்டும் என்பது விதி ). ஒரு மனிதனின் பின்னணியை மாற்ற 5 திர்ஹம் ஒன்றும் கூடுதல் இல்லைதான். ஆனால் அந்த பின்னணி மாற்றம் புகைப்படத்தில் மட்டும்தானே , வாழ்கையில் இல்லையே!!!!

                   சில மணித்துளி விவாதத்திற்கு பிறகு கூடுதல் கட்டணம் இன்றி புகைப்படம் பிரதி எடுத்து தர சம்மதித்த கடைக்காரர் கணினியில் தன் வேலையை துவக்கினார். இரவு மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருக்க, எனக்கு பசி வயிற்றில் புகைந்து கொண்டிருந்தது. என்னோடு வந்திருந்த வங்காளி நண்பன் கடையில் தொங்க விட்டிருந்த மாதிரி படங்களை ஒவ்வொன்றாக ஆர்வத்தோடு நோட்டம் விட்டு கொண்டிருந்தான். நான்கைந்து குழந்தை படங்கள் இருந்த பக்கம் சில நிமிடம் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் அவன். 

                     பிறகு என்னிடம் வங்காளி கலந்த ஹிந்தியில் கேட்டான் "உலகிலேயே மிகவும் அழகானவை உண்டென்றால் அது குழந்தைகள்தானே சகோதரா!!!!"

                     அவனுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், அந்த குழந்தை இப்போது பள்ளிக்கு போக தொடங்கியதும், அந்த குழந்தை பிறந்து இன்று வரை அதை இவன் பார்த்ததே இல்லை என்பதும், அதற்கான விடுப்பும் விமான பயண சீட்டும் அவன் பணி புரியும் தொழிற்சாலையில் இன்னும் கிடைக்க வில்லை என்பதும் எனக்கு இப்போதுதான் சுரீர் என்று உறைத்தது.

                     இப்போது என் வயிற்றில் இருந்த பசி எரிச்சல் கொஞ்சம் மேலேறி நெஞ்சு குழியில் நிலைக்கொண்டு நெடுநேரம் நீங்காதிருந்தது.