Thursday, January 9, 2014

திருப்பதி 

சனி நீராடி , திருமண் பூசி, உச்சி வரை உண்ணாதிருந்து
கையிரண்டும் குவித்து "கோவிந்தா" என கூவி மண்டியிட,
உலர்ந்த மூங்கில் காலிரண்டும் உதறியது
அப்போதுதான் உணர்ந்தேன் 
பெருமாள், பெரிய பாட்டனை விட பெரியவனென்று!!!

பாட்டனுக்கு பெருமாளோடு அலாதி பிரீதி
உண்டி கட்டி போட்டு வைத்தான் 
ஓரணா, காலணா என்று ஆண்டாண்டாய் 
அணா ரூபாயானது
கோவிந்தன் இன்னும் கூப்பிடவில்லையென
பெருமூச்செறிந்தான் பெரிய கிழவன்.

யானை விளிகேட்டு பருந்தில் வந்தவன் 
கிழவன் குரல்கேட்டு கனாவில் வந்தானாம்
இப்போதே ஏறுவோம் எழுமலை என்று
புறப்பட்டான் பெரிய கிழம் தன் பரம்பரை புடை சூழ
பிள்ளைகள் ஆறும் அவர்தம் பெண்டுகள் ஆறும்
பெண்கள் நாலும் அவர்தம் புருஷர்கள் நாலும்,
பேரப்பிள்ளைகள் எத்தனை ? எண்ணிட இயலுமோ?
எண்ணத்தான் வேண்டுமோ?

ஊரே கூடி வர மூன்று பந்தி போட்டாச்சு.
எல்லார்க்கும் விடை சொல்லி பட்டாளம் 
புறப்பட்டு பாதை வழி வந்தாச்சு.
எட்டு நாள் பயணமாம்,  ஏழு மலை ஏறனுமாம்
எம்மானை கண்டுவிட்டால் எழுபிறவி புண்ணியமாம்

இரா தங்க சத்திரமும் சாவடியும் வழி நெடுக
உண்டென்று கண்டவர்கள் சொன்னதுண்டு.
உண்டி உடைத்து உண்டு சமைத்து 
மிச்சமிருந்தால் மாதவனுக்கே!
இதற்குத்தான் உண்டியலே 

புள்ள குட்டியோடு, பெண்டு, பிறப்போடு 
மலையேறி வந்ததுமே மயிர் மழித்து 
தலை முழுகி, கந்த குறடிழைத்து பூசி
ஆற்றங்கரை கூழங்கல்லாய் அத்தனையும் மொட்டை

கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு 
அடிக்கொருதரம் அங்கம்  பட வீழ்ந்து 
கோன் அவனை கண்ட க்ஷணம் கண்ணீர் மல்கி
தான் யாரென மறந்ததாய் கிழவன் சொல்வான் 
ஆமென ஆமோதித்த கிழவி மயிர் கூச்செறியும்

தீராத தாகம் திருப்பதி மேல் உண்டென்று
நேர்த்தி கடன் தீர்த்திடவே நானும் புறப்பட்டேன்
அத்தையும், சித்தியும், ஐந்தாறு நண்பர்களும் 
அழைத்தே தீர வேண்டிய அருமை சொந்தம் சில
அழையாமல் நுழைந்த ஆறேழு பேரோடு 
மொத்தம் எண்ணிக்கை முப்பது எழு

எந்த வண்டி வைத்தாலும் எஞ்சி நிற்கும் சில தலைகள்
புகை வண்டி பார்ப்போம் என்றால் இல்லையே இடம்
வண்டிகதை தொக்கி நிற்க, முன்பதிவு முக்கியமாம் 
சொல்லிபோனார் சொக்கன் மாமா
முகுந்தனை காணவும் முன்பதிவா?
ஆன் லைன் பூக்கிங் ஆறு மணியோடு முடிந்ததாம்

முப்பது ரூபாய் முன்பதிவு மூன்று தினம் முன்பே முடிந்திட
முந்நூறு முன்பதிவு மட்டுமே மிச்சம்
முந்நூறு என்றவுடன் முப்பத்தேழு வெறும் ஏழானது
ஏழு மலை ஏறிட ஏழு பேர் போதுமென்று 
கிளம்பினோம் "கோவிந்தா " என முனகி

சொகுசான பயணம் அது மலை ஏற்றி விட்டு விட
மக்கள் வெள்ளம்  என மலை நிறம்பி வழிகிறது
பதைக்கும் மன்பதை எங்கும் கால் வைக்க இடமில்லை
எள் விழுந்தால் எண்ணெய் ஆகும் 

முன்னூறு வரிசையே முப்பது மணி நேரம் என்றால்
இலவச தரிசனம் இப்பிறவியில் கிட்டுமோ

தர்ம தரிசன கூட்டத்தை தரித்திரம் என்றான் 
முப்பது ரூபாய் டோக்கன்காரன்
முப்பதை முகம் சுழித்து "மூதேவி" என்றிட்டான்
முன்னூறு ரூபாய் முன்பதிவாளன்

சாரையாய் ஊரும் சாமி எரும்பென எல்லாரையும் 
ஏளனம் செய்து ஏறினான் ஆயிரம் ரூபாய் விஐபி
இறைவன் முன்பு எல்லோரும் சமம்
எளக்காரமாய் சிரிக்குது எப்போதோ படித்த பாடம்

கருவறை காணும் முன் வழிந்து வரும் நீர்த்தாரை 
கழுவி போகிறது காண வருவோர் கால்களை  
அடிகளை அலம்பியாச்சு, உளங்களை??
துணி வெளுக்க மண்ணுண்டு, மனம் வெளுக்க மண்ணில்லையே 

காட்சியெல்லாம் கண்டும் காணார்போல் 
நாமத்தில் முகம் மறைத்து நமட்டை சிரிக்கின்றான் "நாராயணன்"
பட்ட பாடு கொஞ்சமல்ல பாரடா பரந்தாமா என ஒரு கணம் 
பார்க்கவும் விடாமல் பறித்து இழுத்து புறந்தள்ளியது தேவர் படை 

எஞ்சிய ஏமாற்றாத்தோடு நெஞ்சினில் வெஞ்சினதொடு
வேகமாய் வெளியேற வழியில் நெய் வழிய லட்டு
இடக்கை மீது வலக்கை வைத்து பக்தியோட வாங்கி 
கண்களில் ஒற்றி "கோவிந்தா" என்று சொல்லி வாயிலிட
ஏனோ வேப்பங்கொழுந்தாய் வாயெல்லாம் கசப்பு.   
























 















No comments:

Post a Comment