Friday, November 11, 2011

வாணி ஜெயராம் & மால்குடி சுபா


எனக்கு பிடித்த பாடகிகளில் வாணி ஜெயராமும் மால்குடி சுபாவும் முக்கியமானவர்கள். அவர்களின் குரல் வளம் அருமை பெருமைகளை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். இங்க நான் சொல்ல விழைவது இவர்கள் வாயிலாக ஒரு ஆன்மீக சிந்தனை.


ஒருமுறை வாணி ஜெயராமிடம் அவர் ஏன் இப்போதெல்லாம் திரைஇசை பாடல்கள் பாடுவதில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்னார் "இப்போதைய சினிமா பாடல்கள் தரமற்ற வகையில் இருப்பதால் சினிமாவில் பாடுவதில்லை. ஆனால் பக்தி பாடல்கள் மட்டும் தொடர்ந்து பாடி வருகிறேன்"  அவர் சொல்வது உண்மைதான். இப்போதைய பாடல்கள் கவர்ச்சி என்னும் எல்லையை மீறி ஆபாசத்தில் நீந்தி கொண்டிருப்பது உண்மைதான்.

             "எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும் ,
               நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்"


 என்று காதலில் கண்ணியம் பேசிய பாடல்கள் எல்லாம் மலையேறி போய்விட்டது. ஒருவகையில் வாணி ஜெயராம் இப்படி முடிவெடுத்தது சரிதான்.

               ஒருமுறை மால்குடி சுபாவிடம் அவர் பாப் மற்றும் "கிளப்" பாடல்கள் பாடுவதை பற்றி கேட்டபோது (இப்போது அவர் நிறைய பக்தி பாடல்களும் பாடி இருக்கிறார்) அவர் சொன்ன விளக்கம் அவர் மீதான என் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. அவர் சொன்னார் " நான் பாட வேண்டும் என்பது நான் எடுத்த முடிவல்ல. இந்த குரலும் பாடலும் இறைவன் தந்தது. நான் பாடும்போது இறைவனுக்கு கொஞ்சம் அருகில் செல்வது போல் உணர்கிறேன். எனக்கு பாடும் அந்த ஒலி மட்டுமே தெரிகிறது. மற்றபடி அது என்ன மொழி, என்ன அர்த்தம என்பது எனக்கு பொருட்டல்ல. ஏனெனில் இசை என்னை இறைவனுக்கு கொஞ்சம் அருகில் எடுத்து செல்கிறது"

             உண்மைதான். அவர் பாடுவது எதுவாக இருந்தாலும் எல்லாம் ஓசையின் வெவ்வேறு பரிமாணங்கள் தானே? அதற்கு நல்ல / கேட்ட அர்த்தம கற்பிப்பது நாம்தான். பாடவைப்பவர் இருக்க பாடுபவரை எப்படி குறை சொல்ல முடியும். அவர் பாடும் போது ஆன்மா இறைவனுக்கு சற்று அருகில் செல்வதாக உணர்கிறார். அவர் பாடுவதில்லை. பாட வைக்க படுகிறார். அவர் பாடாத போது அந்த பாடலின் அர்த்தத்திற்கு அவர் பொறுப்பாக முடியாது.

                வாணி ஜெயராம் இன்னும் "தான்" பாடுவதாக உணர்கிறார். அதனால் தவறு என்று அவர் நினைக்கும் பாடல்களை தவிர்க்கிறார். ஆனால் சுபா "தான்" பாடுவதாக சொல்லவில்லை. இறைவன் தன்னை பாடவிப்பதாக சொல்கிறார்.

                    இதைதான் "தான்" என்ற அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று மறை நூல்கள் சொல்லுகின்றன. இயங்குபரும் இன்றி, இயக்குபவரும் இன்றி வெறும் 'இயக்கம்" மட்டுமே மிஞ்சி நிற்கும் அந்த நிலை, இதுதானே வேதங்களும் சாஸ்திரங்களும் காண துடிக்கும் இறுதி நிலை.

                      செய்பவன் தன்னை மறந்து, செயவிப்பவனை தேடி அவனும் மறைந்து வெறும் "செயல்" மட்டும் நிலைத்து இருப்பதுதான் பிரபஞ்ச பேரியக்கத்தின் தத்துவம். சுபாவின் ஆன்மிக கருத்தாழம் பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment