Monday, November 7, 2011

பிரிவு

                     சென்னையில் இருந்து ஷார்ஜா வரும் விமானத்துக்காக காத்திருந்தேன். நேரம் நள்ளிரவு ஒரு மணி. ஒரு பெண், கையில் 2 வயது பெண் குழந்தை, கூட ஒரு வயதான பெண் (அந்த பெண்ணின் தாயார்) இன்னொரு இளம்பெண் (தங்கையாக இருக்க கூடும்) வழி அனுப்புவோர் கூட்டத்தில் காத்திருந்தனர். புர்கா அணிந்த அந்த பெண் கையில் இருந்த குழந்தையை தாயாரிடம் கொடுத்து விட்டு போர்டிங் பாஸ் வாங்க சென்றாள். தாயை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை வீரிட்டு அழுதது.பாட்டி எத்தனை சமாதானம் செய்தும் குழந்தை அடங்க வில்லை. பாஸ் கிடைத்ததும் வேகமாக சாமான்களை ஒப்படைத்துவிட்டு immigration check செய்து விட்டு, திரும்பி பார்க்காமல்  விமான நிலையம் உள்ளே சென்று மறைந்தே விட்டாள். குழந்தை இன்னும் கதறி கொண்டிருந்தது. பாட்டி புர்கா நுனியில் குழந்தையின் மூக்கை சிந்தி என்னமோ சொல்லி தேற்ற முயன்று கொண்டிருந்தாள்.

                     விமானத்தில் எனக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்த்திருந்தாள் அந்த பெண். முகத்தில் எந்த சலனமும் இல்லை. உணர்ச்சிகள் எதையும் வெளிப்படுத்தாத கண்கள். விமானம் மேலெழுந்து, சீட் பெல்ட் குறி அணைந்ததும் கழிப்பறை நோக்கி சென்றாள் அந்த பெண். சுமார் இருபது நிமிடத்திற்கு பிறகு திரும்பி வந்து அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் .

                      இப்போதும் அவள் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. ஆனால் அவள் இமைகள் சற்று வீங்கி கண்கள் சிவந்து இருந்தன.

No comments:

Post a Comment